“கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையும் போது தமிழகத்தில் சுமார் 3,000 செவிலியர்கள் மருத்துவ தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 12,000 முதல் 14,000 ரூபாய் வரை தொகுப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. தங்குமிடமும் உணவும் அரசு சார்பில் அளிக்கப்பட்டன.
கொரோனா தொற்று உச்சம் தொட்ட காலத்திலும் சரி, தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்போதும் சரி, தங்களது உயிரைத் துச்சமென கருதி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். “கருணையின் வடிவமாகவே செவிலியர்களை காண்கிறேன்” என்று இன்றைய முதல்-அமைச்சரும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.
செவிலியர்கள், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரமற்ற சூழலில், உரிய தங்கும் வசதிகள் கூட இல்லாத நிலைமையில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள். இன்றைய முதல்-அமைச்சர் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 1,212 ஒப்பந்த முறை செவிலியர்களை பணி நியமனம் செய்தது. மீதமுள்ள செவிலியர்களின் வாழ்வும் மலர்ந்து விடும் என்னும் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் கடந்த 2 மாதங்களில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவு, தங்கும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. மீதமுள்ள செவிலியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையை அரசு தரப்பிலிருந்து பதில் இல்லை.
நல்லரசு என்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அளிக்க வேண்டுமே அல்லாது இருக்கும் வாய்ப்புகளை அழிக்கக் கூடாது. போதிய மருத்துவர்கள் இல்லாமல் காலத்தில் நம் மருத்துவ கட்டமைப்பு அல்லாடியது நம் அனைவருக்குமே தெரியும். கொரோனா இன்னமும் நீங்கி விடவும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே வைத்திருப்பது சரியல்ல.
கொரோனா பேரிடரின்போது நம்மை காத்து நின்ற செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது தான் அறம். தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆவன செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
























