சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. உடல் உறுப்புத் திருட்டை மையப்படுத்திய திரைப்படமாக இருக்குமா என்கிற கேள்வியை ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கிறது.
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கொக்கைன் கடத்தலை ஒரு குடும்பத்தை வைத்து நகைச்சுவையாக சொன்ன அத்திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது. அப்படத்தில் நகைச்சுவை நன்றாகக் கூடி வந்திருந்தது. அவரது அடுத்த படமான டாக்டர் திரைப்படத்திலும் அதே போன்று நல்ல நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இத்திரைப்படம் அக்டோபர் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. கடத்தல் மற்றும் உறுப்புத் திருட்டு பற்றி ட்ரெய்லரில் சில குறிப்புகள் இருப்பதால் உறுப்புகளை விற்கும் சிவப்பு சந்தையைப் பற்றிய படமாக இது இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உறுப்புகளைத் திருடி விற்கும் சிவப்பு சந்தை குறித்து ஏற்கனவே காக்கிச்சட்டை, என்னை அறிந்தால் போன்ற படங்கள் வெளிவந்துள்ளது.
வினய் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் அவருக்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் ஜொலிக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. எந்தக் கதையாக இருந்தாலும் தன் நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கூடிய திரைக்கதையால் படத்தை நன்றாகக் கொண்டு வந்து விடுவார் என்கிற நம்பிக்கை நெல்சன் திலீப்குமார் மேல் உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
























