நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிகைகளுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதோடு மருத்துவ மாணவர்களுக்காக சில கோரிக்கைகளையும் வைத்திருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.
- தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தையும் (100%) அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கவேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்காரணமாக, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு இல்லாமல் போய்விட்டது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண, அகில இந்தியத் தொகுப்பிலிருந்து தமிழ்நாடு வெளியே வருவது, அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை தகுந்த சட்ட ஆலோசனை பெற்று தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் .
- l பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு எட்டு மணி நேர சுழற்சி (shift) வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.மருத்துவம் சாராத ,படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை வழங்கக்கூடாது,இதைக் கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக்கோரி டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத் அவர்களால்,சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
- மாணவர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் பல மணிநேரங்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டால் அதைப்பற்றி, புகார் கொடுக்க ஒரு கமிட்டி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சரியான தொழிலாளர்கள்,போதுமான அளவு இல்லை என்பதற்காக மாணவர்களை அதிக நேரம் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குநர் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மருத்துவக் கல்வி பயிலும் இளநிலை , முதுநிலை,உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களின் கல்வித் தரம், உயர்த்தப்பட வேண்டும்.அவர்களின் உடல் நலம், மன நலம் உள்ளிட்டவைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- விடுதி வசதி ,வேலை நேரம்,விடுமுறை பெறுதல் போன்றவற்றில் மாணவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. வேறு மாநிலம் மற்றும் வெளிநாடு சென்று பயிலும் தமிழக மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளளை எதிர்கொள்கின்றனர். இது போன்ற மருத்துவ மாணவர்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக ’மருத்துவ மாணவர் நல வாரியம்’ என்ற அமைப்பை மாநில அளவில் ஏற்படுத்த வேண்டும்.
- முதுநிலை மருத்துவப் படிப்பின் பொழுது 4 மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும்( District Residency Program) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முயல்கிறது. இது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
- மத்திய அரசே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் தானே மாணவர் சேர்க்கையை நடத்திட முயல்வது, மாநில உரிமைகளின் நலன்களுக்கு எதிரானது. இது கண்டனத்திற்குரியது. இதையும் கைவிட வேண்டும்.
- தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் நூறு விழுக்காடு இடங்களுக்கும் கட்டணத்தை மத்திய – மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்.
- தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் கடுமையான கட்டணக் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையையும் பாதிக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் மீது எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை. கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை அரசே ஏற்கும் வகையில் கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
- மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை இறுதி வரை மத்திய மாநில அரசுகளே நடத்திட வேண்டும். தனியார் நிறுவனங்களை மாப் அப் (MOP UP) கவுன்சிலிங் என்ற பெயரில் ,இறுதிக் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அது பல முறைகேடுகளுக்கும் ,கட்டாய நன்கொடை வசூலுக்கும் காரணமாகிறது.
- ஏழை மாணவர்களின் கல்வி,விடுதி மற்றும் கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.
- கல்விக் கடன்களை பெறுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். எஸ்.சி ,எஸ்.டி மாணாக்கர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் (Post Matric) கல்வி உதவித் தொகையை அதிகரித்து முறையாக வழங்கிட வேண்டும். அந்த உதவித் தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூபாய் 8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
- போட்டித் தேர்வுகளில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல் உள்ளிட்ட முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
- அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்வி தரத்தை உயர்த்திட வேண்டும். இலவச லேப்டாப், கல்லூரிகளில் இலவச இணைய வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும்.
- இளம் மருத்துவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களின் வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அதிக அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எனவே ஆண்டு தோறும் எம்.ஆர்.பி ( MRB) தேர்வு நடத்தி, மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்திட வேண்டும். மருத்துவர்களின் ஊதியத்தை அதிகரித்திட வேண்டும்.
- இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பை ,பல் மருத்துவப் படிப்பை முடித்து, தற்காலிக பணியில் இருக்கும், மருத்துவ அலுவலர்களின் ,பல் மருத்துவர்களின் மாத ஊதியத்தை காலதாமதமின்றி உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். அவர்களின் ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.
- மருத்துவம் அல்லாத தொழிற் கல்வி படிப்புகளுக்கும், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியதாலும், அவர்களின் கல்விக் கட்டணம்,விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றதாலும், இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இது மிகவும் வரவேற்புக் குரியது. மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ,தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
























