எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான சர்வானந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கணம்’ என்கிற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.
‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சர்வானந்த். அப்படத்துக்குப் பிறகு தெலுங்குக்குச் சென்றவர் நிறைய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் நாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள ‘கணம்’ திரைப்படத்தின் நாயகனாக சர்வானந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியிருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட நாயகி ரிது வர்மா இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், 80களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகையும், நாகர்ஜுனா மனைவியுமான அமலா நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்தமிழ் படத்தில் நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகளில் உள்ளது.
























