பள்ளி மணவர்கள் பலரும் மொபைல் கேம் அடிமைத்தனத்துக்கு ஆளாகும் அபாயத்திலிருந்து காப்பது குறித்த வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பலரும் மொபைலில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இது அவர்களின் உடல் மற்றும் உளவியலையும் பாதிக்கக்கூடியது. இதனை பொருட்படுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை இது குறித்து வழிகாட்டு முறைகளை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், மாணவர்கள் செல்போனில் எவற்றை பார்க்கின்றனர்.எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் செயலிகளை கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்ய குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, மாணவர்களின் நடத்தையில் மாற்றம் தென்பட்டால் உடனடியாக கேட்ஜெட்களை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய கல்வித்துறையின் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இச்சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
























