மருந்தாளுநர்களின் தேவை மற்றும் அவர்களின் பங்களிப்பை உணர்த்தும் விதமாகவும், மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் உலக மருந்தாளுநர்கள் தினம் (september 25) இன்று கொண்டாடப்படுகிறது.
மருத்துவர்களின் சேவை குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் மருத்துவத் துறையில் மருந்தாளுநர்கள் (pharmacist) பங்கு குறித்து பலருக்கும் தெரியாது. புதிய மருந்தைக் கண்டுபிடிக்கையில் அந்த மருந்தின் தரத்தை முடிவு செய்வதும் அதன் அளவைக் கணக்கிடுவதும் மருந்தாளுநர்களின் பணிதான். சந்தைக்கு வரும் புதிய மருந்துகளை மருத்துவர்களுக்குப் பரிந்துரைப்பதும் அவர்களே. எல்லா நோயாளிகளும் ஒன்றல்ல. சில நோயாளிகளுக்கு சில மருந்துகளைக் கொடுக்க முடியாது. அதனை முடிவு செய்வதும் மருந்தாளுநர்கள்தான். நோய் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விளக்குவது மருத்துவரின் கடமை என்றால் மருந்து குறித்தும் அதன் பக்க விளைவுகள் குறித்த நோயாளிகளின் கேள்விகளுக்கு பதில் தருவது மருந்தாளுநர்களின் வேலை. மருந்தகத்தை நிர்வாகிப்பது, மருந்துகளின் வரத்தைக் கண்காணிப்பது, பற்றாக்குறைகளை கண்டறிந்து தீர்ப்பது என மருந்தாளுநர்கள் ஆற்றும் பங்கு அதிகம்.
இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாளுநர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக international pharmatical federation மூலம் துருக்கி, இஸ்தான்புல்லில் 2000ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் உலக மருந்தாளுநர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ம் மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் உலகெங்குமுள்ள மருந்து நிறுவனங்கள் சிறப்பு நிகழ்வுகள், விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
























