புதுச்சேரியில் 1823ஆம் ஆண்டு ஜிப்மர் நிறுவனம் துவக்கப்பட்டது. தற்போது 2,300 படுக்கை வசதிகளுடன் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. தினமும் 8,000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாத வருமானம் 2,499 ரூபாய் கீழ் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ஜிப்மரில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் 2,499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜிப்மருக்கு பல மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள் சிசிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன்பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தகுதியாக கேட்க கூடாது. இத்திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.

இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக, நாளிதழ்களில் இன்று (24-09-2021) வெளியாகி உள்ளது.
இது குறித்து விசாரிக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையைத் தொடர ஜிப்மர் நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுமாறும் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























