ஐபிஎல் தொடர் போட்டிகளில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ள நிலையில் இப்போதே ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் தொடங்கி விட்டது.
ஐபிஎல் அணிகளிலேயே சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் விளையாடும்போது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆகவே, சென்னை – மும்பை மேட்சாகட்டும், சென்னை – பெங்களூரு மேட்சாகட்டு இரண்டும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் போல உக்கிரமாக இருக்கும்.
இந்த ஐபிஎல் தொடரோடு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக கோலி அறிவித்துள்ளார். ஈ சாலா கப் நம்தே என்று பல காலம் சொல்லி வந்தாலும் இதுவரை பெங்களூரு ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. இம்முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் பேரார்வமாக இருக்கிறது. அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த முறை ப்ளே ஆஃப் கூட வரவில்லை. இச்சூழலில் தற்போது இழந்த ஃபார்மை திரும்பப் பெற்று விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையை விட பெங்களூரு அணி ப்ளே ஆஃப்க்குள் நுழைய வேண்டுமெனில் இனி ஒவ்வொரு போட்டியிலும் வென்றாக வேண்டிய நிலை இருக்கிறது.
இப்படியான சூழலில் இன்றைக்கு சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே போட்டி நடைபெற இருக்கிறது. பெங்களூருவுடன் ஒப்பிடுகையில் சென்னை அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. அது மட்டுமின்றி சென்னை அணி பெங்களூருவை பல முறை வீழ்த்தியிருக்கிறது. ஆகவே சென்னை அணிதான் வெல்லும் என்பது பொதுவான கருத்தாக நிலவி வருகிறது. சென்னை அணியின் பரம வைரியான மும்பை அணியினர் கூட சென்னை அணிதான் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் ப்ளே ஆஃப் செல்வதில் மும்பைக்கு போட்டியாக இருக்கக்கூடிய அணிகளில் பெங்களூரு முக்கியமானது. ஆகவே, பெங்களூரு தோற்றால் தாங்கள் ப்ளே ஆஃப்க்குள் நுழைய முடியும் என நம்புகிறார்கள் மும்பை ரசிகர்கள்.
நடப்பது வெறும் போட்டியல்ல யுத்தம் என்றுதான் சொல்ல முடியும். இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை அடையும். பெங்களூரு அணி வெற்றி பெற்றால் தற்போது இருக்கிற அதே மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். என்ன நடக்கிறது பார்ப்போம்.
























