இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் கோச் ஷேன் பாண்ட் தெரிவித்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் பலம் வாய்ந்த வீரராகக் கருதப்படுகிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதோடு சிறந்த பவுலிங் செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு மும்பை இந்தியன்ஸ் விளையாடிய இரண்டு மேட்ச்களிலும் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுடன் மும்பை மோதிய இரண்டு ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹர்திக் பாண்டியா விளையாடாதது மும்பை ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில் “ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கான உடற்தகுதியை கிட்டத்தட்ட எட்டி விட்டார். தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வீரர்களின் உடற்தகுதி மற்றும் நலன் சார்ந்து யோசிப்பது முக்கியம். ஆகவேதான் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டது” என்று கூறியுள்ளனர்.
























