கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட கண்ணகி – முருகேசன் தம்பதியினர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேரில் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த கண்ணகி மற்றும் முருகேசன் இருவரும் 2003ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதன் காரணமாக கண்ணகியின் குடும்பத்தினர் அவர்கள் இருவருக்கும் காது மற்றும் மூக்கு வழியாக விஷத்தை செலுத்தி அவர்களை கொலை செய்தனர். மேலும், உடல்களை தனித்தனியாக எரித்தனர். இக்கொலைச் சம்பவத்துக்கு முதலில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்தே வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, அன்றைய விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகிய 15 பேர் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்பட்டனர். அவர்களில் குணசேகரன் மற்றும் அய்யாசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 13 பேருக்கும் தண்டனை விவரங்களை கடலூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத்தண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஆணவக்கொலைக்கு எதிராக இன்றைக்கு பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், இத்தீர்ப்பு நீதியை நிலைநாட்டியிருப்பதாக பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைக்கு அபாய மணியாகவும் இத்தீர்ப்பு அமையும்.
























