இந்தியாவின் மிகப்பழமையான மலை ரயில் பாதைகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் – உதகை ரயில் கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் நிலையில், காந்தி ஜெயந்தி தினத்தன்று மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு தினமும் சென்று கொண்டிருந்த மலை ரயில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆம் தேதி மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று, சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மலை ரயில் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட பின், காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் புறப்படும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலை ரயிலில் செல்வதற்கு பலரும் விரும்புவர். இயற்கை அழகை கண்டு கொண்டே செல்லலாம் என்பதால் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























