சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக நடித்த திரைப்படம் தலைநகரம். ஜோதிர்மயி நாயகியாக நடித்த அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்த முதல் திரைப்படமான தலைநகரம் அதன் நேர்த்தியான திரைக்கதை மற்றும் உருவாக்கத்தால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் வி.இசட்.துரை இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார். துரையுடன் எஸ்.எம்.பிரபாகரன் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். வி.இசட்.துரை இதற்கு முன் சுந்தர்.சி -ஐ நாயகனாக வைத்து இருட்டு திரைப்படத்தை இயக்கிய நிலையில் இக்கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
இத்திரைப்படத்துக்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, மணிஜி வசனம் எழுதுகிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
























