தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் அந்த இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காலியாக உள்ள இரண்டு இடங்களில் போட்டியிட டாக்டர். கனிமொழி என்.வி.என் சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவிருப்பதாக கட்சித்தலைமை அறிவித்திருந்தது.
இவர்களில் டாக்டர்.கனிமொழி மறைந்த மூத்த திமுக தலைவர் என்.வி.என்.சோமுவின் மகளாவார். கே.ஆர்.என்.ராஜேஷ் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாவராவார். இதற்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல், இவர்கள் இருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகியிருக்கிறது.
























