ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டி இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த விஜய்சங்கர் உட்பட 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கடுத்து வீரர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக டெல்லியுடன் நடைபெறவுள்ள இன்றைய போட்டி நடக்குமா? என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லியுடன் மோதுவது சவாலான காரியம்தான். இந்நிலையில், அணியின் பலமாகக் கருதப்படக்கூடியவர்களில் ஒருவரான நடராஜன் இல்லாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாக உள்ளது.
























