நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக மூன்று தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இறுதியாக தற்கொலை செய்து கொண்ட காட்பாடி மாணவி சௌந்தர்யா குடும்பத்தை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா. இவரது பெற்றோர் விவசாயக் கூலி செய்து வருகிறார்கள். நீட் தேர்வு எழுதியுள்ள சௌந்தர்யா தோல்வி பயம் காரணமாக கடந்த 15ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று சௌந்தர்யாவின் குடும்பத்தினரைச் சந்தித்தார். சௌந்தர்யாவின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறிய அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையிலிருந்து 1 லட்சம் ரூபாயும், வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் சார்பாக 72 ஆயிரம் ரூபாயும் ஆறுதல் நிதியாக வழங்கினார். மேலும், தமிழக அரசு சார்பாக சௌந்தர்யாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
























