ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியைப் பொறுத்தவரை தொடரின் முதல் பாதியில் தவான் மற்றும் பிரித்வி ஷா இணை அணிக்கு சிறப்பான தொடக்கங்கள் தந்துள்ளனர்.
அதேபோல் மிடில் ஆர்டரில் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், பன்ட், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் என மிடில் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. பந்துவீச்சிலும் அஷ்வின், ஆவேஷ் கான், ரபாடா, அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் என வலுவாகவே உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

ஐதராபாத் அணி 7 ஆட்டங்களில் விளையாடி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. பல ஆட்டங்களில், நூலிழையில் வெற்றி கை நழுவியது ஐதராபாத்துக்கு பின்னடைவை கொடுத்தது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் டேவிட் வார்னர், ஜேசன் ராய்,மணீஷ் பாண்டே என அதிரடிக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சில் ரஷித்கான், புவனேஷ்வர் குமார், முகமது நபி என பெரும் பட்டாளமே உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் லீடிங் ரன் ஸ்கோரரான பேர்ஸ்டோ தொடரில் இருந்து விலகியிருப்பது இவர்களுக்கு நிச்சயம் பலவீனம்தான். அதேசமயம் முதல் பாதியில் காயம் காரணமாக விலகிய யார்க்கர் மன்னன் நடராஜன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இரு அணிகளும் மோதிய 19 ஆட்டங்களில் மோதியுள்ளன அதில், ஐதராபாத் அணி 11-8 என முன்னிலை வகிக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. இதில் டெல்லி அணிதான் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்ய ஐதராபாத் அணி இந்தப்போட்டியில் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி:
ஜேசன் ராய்\டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), அப்துல் சமத், பிரியம் கர்க், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு/ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி:
ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், பன்ட்(கேப்டன்), ஸ்டாய்னிஸ்\ஹெட்மயர், அஷ்வின், அமித் மிஸ்ரா\அக்ஷர் படேல், ஆவேஷ் கான், ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா
























