ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. லூயிஸ் 36 ரன் விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேற, 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் – லிவிங்ஸ்டோன் ஜோடி 48 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டோன் 25 ரன், ஜெய்ஸ்வால் 49 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர்.

5வது வீரராகக் களமிறங்கிய மஹிபால் லோம்ரர் சிக்சர்களாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்த ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் எகிறியது. ரியான் பராக் 4 ரன்னில் வெளியேற, லோம்ரர் 17 பந்தில் 43 ரன் விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் மார்க்ரம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 ஓவர்களில் 169/5 என்ற நிலையில் இருந்தது முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அட்டகாசப் பந்து வீச்சில் 185 ரன்களுக்குக் ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி.
பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 4 ஓவரில் 32 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.ஷமி 3, போரெல், பிரார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி 19 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல், மயன்க் அகர்வால் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். வெற்றிக்கு தேவையான பெரும்பான்மையான ரன்களை துவக்க வீரர்களே அசல்டாக எடுத்து கொடுத்துவிட்டதால் பஞ்சாப் அணி எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.
அதற்கு ஏற்றார்போல் மார்க்ரமும், நிக்கோலஸ் பூரணும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஒரு ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 4 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது.பஞ்சாப் அணி தான் வெல்லும் என அனைவரும் நினைத்த நிலையில், கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு ஷாக் கொடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மயாங்க் அதிகபட்சமாக 67 ரன், ராகுல் 49 ரன், நிகோலஸ் 32 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 2 விக்கெட், சகாரியா, ராகுல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது. இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வென்றால் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.
























