இன்று செப்டம்பர் 22. காந்தி மேலாடை துறந்த தினம். தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றதும், நம் நினைவில் நிற்பது எளிமையான உடையில் வலம் வந்த அவரின் உருவம்தான். அவரது இடைக்கால வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் தோற்றத்தின் பின் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. அது தமிழரோடு தொடர்புடையது என்பது நமக்குக் கிடைக்கும் பெருமை.
காந்தியடிகளின் வாழ்க்கையில் போர்பந்தர், சபர்மதி, மதுரை ஆகிய 3 இடங்கள் முக்கியமானவை. 1921 செப்டம்பர் 21-ந்தேதி ரெயிலில் மதுரைக்கு வந்த காந்திக்கு வழி நெடுக ஆரவார வரவேற்பு. திரண்டு இருந்த மக்களில் அநேகமாக எல்லாருமே விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானியர்கள். இடுப்பில் ஓர் அரைத்துண்டு மட்டுமே கட்டி இருந்தனர். ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்..?’ என்ற எண்ணம் மகாத்மாவை அலைக்கழித்தது.

‘இந்தியாவில் மிகப்பெரும்பான்மை மக்கள் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள்; தன்னை நம்பி பின்தொடரும் மக்களுக்கு, இரண்டு முழம் துணிக்குக்கூட வழி இல்லை’. மதுரை மேலமாசி வீதியில் தங்கி இருந்த காந்திக்கு, இரவு முழுக்க மன வேதனையில் ஒரு முடிவு எடுத்தார். அதன்படி மறுநாள் காலை ‘அரை ஆடை’ அணிந்தபடி வெளியில் வந்தார். உணவு, உடை, உறைவிடம்-மனிதனின் அடிப்படை தேவைகள். தன் உணவிலும், தங்கும் இடத்திலும் ஏற்கனவே சிக்கனத்தை கடைப்பிடித்து வந்த காந்திக்கு, உடை சிக்கனம் மட்டும் இயலாமலே இருந்தது. இரண்டு முறை இதனை செயல்படுத்த எண்ணியும் நிறைவேறாமல் போயிற்று. மதுரை மாநகர்தான் காந்தியடிகளுக்கு மாற்றத்துக்கான மன உறுதியைத் தந்தது.

இனி தானும் மேலாடை அணியப் போவதில்லை என்று மதுரையில் வைத்து எடுத்த முடிவு பின்னாளில் வேட்டியும் தோளில் துண்டும் அந்நிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது. இது காந்தியை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கி, மக்களை அவரை நோக்கி ஈர்த்தது.
























