கௌதம புத்தர் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் போது ஒரே ஒரு மரக்கன்றை மட்டும் எடுத்துக் கொண்டு போய் சீனாவில் வைத்ததாகச் சொல்வார்கள். அவர் அப்படி எடுத்துச் சென்று நட்டதுதான் நார்த்தை மரம். சீன மக்களின் நல்வாழ்வை விரும்பிய புத்தர், அவர்களின் மனவலி போக்கத் தான் கண்டுணர்ந்த தத்துவங்களையும், உடல் வலி போக்க நார்த்தை மரத்தையும் உடன் எடுத்துச் சென்றிருக்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நார்த்தை மரம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, போன்ற வைட்டமின் ‘சி’ நிறைந்த சிட்ரஸ் பழங்களுக்கெல்லாம் முன்னோடி நார்த்தங்காய். Citrus Medica எனத் தன் தாவரவியல் பெயரிலேயே மருத்துவத்தை உள்ளடக்கி வைத்திருப்பதன் மூலம் இதன் மகத்துவத்தை நாம் அறியலாம்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு நிலையில் உள்ள நோயாளிகளிடம், ‘எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது? உங்கள் வாழ்க்கை முறையில் என்ன தவறு நடந்தது?’ எனக் கேட்கும்போது அவர்கள் எல்லோரும் சொல்லும் பொதுவான ஒரே பதில், ‘நிறைய வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன்’ எனச் சொல்வதுதான். நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையிலேயே மருந்தும் இருக்கிறது. ஆனால் நாம்தான் அதைத் தேட மறுக்கிறோம். அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறி பழங்களை உட்கொண்டாலே நாம் நோய்களின்றி நீண்ட காலம் வாழலாம்.
நார்த்தங்காயில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது?
நார்த்தங்காயைப் பயன்படுத்தி ஊறுகாய் போடும்போது நிறைய உப்பு சேர்க்கப்படுவதால் அது சிறுநீரகத்தை பாதிக்கும். அதனால் ஊறுகாய் போடுவதைத் தவிர்த்து வேறு வழியில் நார்த்தங்காயை சேர்த்துக்கொள்வது உகந்தது. நார்த்தங்காய் தோலில்தான் ஊறுகாய் போடுவார்கள். நார்த்தங்காய் தோலை நன்கு காய வைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு சிட்டிகை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர எலும்பு, மூட்டு வலிகள் நீங்கும். மூட்டுகளுக்கு இடையே இருக்கும் ‘சைனோவில் புளுயட்’ (Synovial fluid) எனப்படும் எண்ணெய்ப் பசை மற்றும் தசைநார்களை பலமாக்கி எலும்பு மூட்டு வலிகளைப் போக்கும். அதுமட்டுமின்றி நார்த்தங்காய் உடலில் உள்ளத் தேவையற்ற கொழுப்பை குறைக்கும். பீட்ரூட் ஜூஸ் போல இதுவும் ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. கொழுப்புக்கு எதிரான சிட்ரஸ் இதில் அதிகளவு நிறைந்துள்ளதால் மாரடைப்பு வராமலும் ரத்தநாளங்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படாமலும் காக்கிறது, மகத்துவம் மிக்க நம் நார்த்தை.

மேலும் நாத்தங்காயில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருப்பதால் அளப்பரிய நோய் எதிர்ப்பாற்றலை அது நமக்குத் தருகிறது. ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியைப் போக்குகிறது. வயிற்று புண்ணை ஆற்றும் அருமருந்தாகவும் இது இருக்கிறது.

நார்த்தங்காயைக் கிடைக்கும்போது அவ்வப்போது சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை ஆகியவற்றை விட நார்த்தங்காய் சற்றே வீரியம் மிக்கது. எனவே ஒரு நார்த்தங்காயை 2 லிட்டர் தண்ணீரில் பிழிந்து விட்டுக் குடிக்கலாம். அப்படி இல்லையென்றால், நார்த்தம் பழத்தை சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நமக்கு கை, கால், மூட்டு வலி வரும் போது, நிறைய பணம் கொடுத்து மருந்தகங்களில் கிடைக்கும் களிம்புகளை (Ointment) வாங்கத் தேவையில்லை. நார்த்தங்காய் தோலை எடுத்துப் பிதுக்கினால், அதிலிருந்து வரும் ஒரு திரவம் . அதை வலி இருக்கும் இடத்தில் நன்கு தடவிவிட்டால் போதும் வலி பறந்து போகும்! வலிக்கு மார்ஃபின் (Morphine) மாத்திரைகள் எடுத்துக்கொண்டும் குறையவில்லை எனச் சொல்லும் கேன்சர் நோயாளிகளுக்குக் கூட இந்த வலி நீக்கும் நார்த்தங்காய் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்! வீட்டுக்கு ஒரு நார்த்தை மரம் வளர்ப்போம். வலி இல்லா வாழ்க்கை வாழ்வோம்!!
























