தமிழில் விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘96’ கன்னடம், தெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.
எல்லோருக்கும் அவர்கள் வாழ்வில் முதல் காதல் தனித்துவம்மிக்கது. எளிதில் நினைவை விட்டு அகலாதது. ஆண்ட்ராய்ட் காலத்துக்கு முற்பட்ட 90களின் பள்ளிக்காலக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 96. சூழ்நிலையின் காரணமாக அக்காதல் கைகூடாமல் போனாலும் நாயகியின் நினைவைச் சுமந்து வாழும் நாயகன், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகியைச் சந்திக்கும் தருணமே படத்தின் மையமாக இருந்தது. 80 களில் பிறந்தவர்களுக்கு ‘அழகி’ படம் எப்படிப்பட்ட உணர்வைக் கொடுத்ததோ 90களில் பிறந்தவர்களுக்கு இத்திரைப்படம் அப்படியோர் உணர்வைக் கொடுத்தது.
தமிழில் வெளியான சிறந்த காதல் படங்களில் ஒன்றான 96 திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. அதற்கான உரிமையை அஜய் கபூர் பெற்றுள்ள நிலையில் விரைவில் நடிகர் மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
























