ஐபிஎல் 14ஆவது சீசன் 32ஆவது லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தில் உள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது. எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுவரை இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வென்றுள்ளது.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் (ஒரு சதம் உள்பட 277 ரன்கள்) நல்ல பார்மில் இருக்கிறார். ஷிவம் துபே (145 ரன்கள்), டேவிட் மில்லர் (102 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு கைகொடுத்து வருகிறார்கள்.
பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ் (14 விக்கெட்) முஸ்தாபிஜூர் ரகுமான் (8 விக்கெட்), சேத்தன் சக்காரியா (7 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்படுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், ஆன்ட்ரூ டை ஆகியோர் விலகியதை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா), அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் அந்த அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்அணியில் லோகேஷ் ராகுல் (331 ரன்கள்), மயங்க் அகர்வால் (260 ரன்கள்), கிறிஸ் கெய்ல் (178 ரன்கள்), ஷாருக்கான், தீபக் ஹூடா ஆகியோர் அந்த அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கின்றனர். அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரானின் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. ஐபிஎல் முதற்பகுதியில் நிகோலஸ் பூரான் 28 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

பந்து வீச்சில் முகமது ஷமி ( 8 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (7 விக்கெட்), முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பான வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். டேவிட் மலான், ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் விலகியதை தொடர்ந்து மார்க்ரம் (தென்ஆப்பிரிக்கா), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (இங்கிலாந்து), நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் பஞ்சாப் அணியில் புதிதாக இணைந்துள்ளனர்.

துபாய் மைதானத்தில் இதற்குமுன் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மைதானம் பந்துவீச்சுக்குத்தான் சாதகமாக இருந்தது. இதனால், இன்றைய போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளுக்கு இடையில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றிருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பஞ்சாப் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி
கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல் / எய்டன் மார்கரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், அடில் ரஷித், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், முகமது ஷமி.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி
இவின் லூயிஸ், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிவம் துபே, லியம் லிவிங்ஸ்டன், ராகுல் திவத்தியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி, முஸ்தபிசுர் ரஹ்மான்.
























