ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிமி என்கிற இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலான ‘பரமசுந்தரி’ பாடல் இரண்டே மாதத்தில் 15 கோடி பார்வைகளைத் தொட்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் வேற லெவல் ஹிட்டடித்திருக்கும் இப்பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் க்ராஃப் மேலும் உயர்ந்திருக்கிறது.
பங்கஜ் திரிபாதி, கீர்த்தி சனோன் நடிப்பில் ஜூலை 26ம் தேதி வெளியான படம் மிமி. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பரமசுந்தரி பாடல் ஜூலை 16ம் தேதியே வெளியானது. இப்பாடல் வெளியான முதல் நாள் தொட்டே பாடல் எதிர்பார்ப்பைக் கடந்த வெற்றியைப் பெற்றது. பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியதால் பார்வை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய வெற்றியை இப்பாடல் மூலம் கொடுத்துள்ளார்.
இரண்டே மாதத்தில் 15 கோடி பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கும் இப்பாடல் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர்களில் ஒரு தரப்பினர் இப்பாடல் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கலையம்சம் கூடிய இசையினை வார்க்கும் ரஹ்மான் இவ்வளவு கமர்ஷியலாக இறங்கி அடிக்கக்கூடாது என்கிற கருத்தையும் அத்தரப்பு முன் வைக்கிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து விட்டுப் பார்த்தால் கொண்டாட்டத்துக்கான பாடலாக அப்பாடல் திகழ்கிறது. இந்தியாவில் இன்ஸ்டா ரீல்ஸில் இப்பாடலே ட்ரெண்டில் உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் பரமசுந்தரி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுக் கொண்டுள்ளனர்.
























