தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதையொட்டி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களையே நடத்தும்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில் அதனை நடத்த மேலும் 7 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.
தமிழக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அமர்வு ஒரு நாள் கூட அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவது தேர்தல் ஆணையத்துக்கு எப்போதும் கடினமாகவே இருப்பது ஏன் என்று கேட்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களையே நடத்தும்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை என்று தலைமை நீதிபதி கேள்வி கேட்டார்.
அதற்கு, கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதாலேயே கால அவகாசம் கேட்பதாகவும், நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கினால் கூட போதும் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறினார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்னென்ன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
























