தமிழக பாஜகவினரின் பாலியல் தொந்தரவுகள் தொடர்பான 14 வீடியோக்கள் பாஜக தலைமையால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, எம்.பி அவருடைய முகநூல் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக கட்சியைச் சேர்ந்த மதன், தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமான செய்கைகளுடன் உரையாடுவதாக இடம்பெற்றிருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இதனையடுத்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்ய, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்னிடம் வீடியோவை மதன் காட்டவில்லை என அறிக்கை வெளியிட, அண்ணாமலை இந்த வீடியோ தொடர்பாக பேசிய ஆடியோவை மதன் வெளியிட்டார். இதையடுத்து, மதனை கட்சியில் இருந்தும் நீக்கினார். இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடாவின் பாலியல் சேட்டை வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி தமது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சியான சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் பாலியல் பாஜகவின் கே டி ராகவன் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது. பாலியல் பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. பாஜகவின் உள்ளும், வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அதனால்தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார் என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீம் சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

நாம் தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என ஜோதிமணி எம்.பி. தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் தமிழக அரசியல் களத்தில், தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தமிழக பாஜக-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, கே.டி.ராகவன் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், பாஜக-வில் இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
























