பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் புதிய முதலமைச்சரை காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் உட்கட்சி எதிர்ப்பின் காரணமாக தனது பொறுப்பிலிருந்து விலகினார். இந்நிலையில் புதிய முதல்வராக யாரை நியமிப்பது என்பது பற்றி காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துரையாடப்பட்டது.
பல்வேறு பெயர்கள் முதல்வர் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சரண்ஜித் சிங் சன்னிதான் பஞ்சாப்பின் முதல் தலித் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
























