பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அது மோதலாகவும் மாறி இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கு நிலவியது.
இந்தநிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரீந்தர் சிங்குக்கு எதிராக மாறின. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அமரிந்தர் சிங், மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதன்பின்னர் அவர் பதவி விலகினார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக (முதல்வராக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமரீந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் ஆவார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதன்மூலம், பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல்வர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் சரண்ஜித் சிங் சன்னி.
இப்போது விஷயம் என்னவென்றால், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவோம் என்று பாஜக ஏற்கனவே கூறியிருந்த நிலையில், மீண்டும் அதே விஷயத்தை பாஜக இப்போது தீவிரமாக்கி வருகிறது.. மற்றொருபுறம், கூட்டணியில் இருந்து விலகியுள்ள சிரோமணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.
இவர்கள் இருவருக்கும் நடுவில்தான் தலித் தலைவர் ஒருவரை பஞ்சாப் முதல்வராக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% வரை தலித்துகள் உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆக, காங்கிரசுக்கும் – பாஜகவுக்கும் நேரடி போட்டி இனி இங்கு வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் முற்போக்கு அரசியல் நிலவும் தமிழகத்தில் இதுவரை அது சாத்தியப்படவில்லை. தமிழகத்தில் என்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரமுடியும் என்ற கேள்விக்கு யாரிடமும் தற்போதைக்கு விடையில்லை என்பதே கவலைக்குரிய விசயம்.
























