ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, தலைமுடி உதிர ஆரம்பித்தால் கவலைகொள்ளத் தொடங்கிவிடுவோம். கவலைப் படும்போது மேலும் முடி கொட்டும். மகிழ்ச்சியாக இருக்கும்போது முடி கொட்டுவது குறையும். ஆகவே, ஐயோ முடி கொட்டுதே என நினைத்தாலே கூடுதலாகக் கொட்டத்தான் செய்யும். சரி, தலைமுடி கொட்டாமல் இருக்க எளிமையான சில வழிகள் இதோ…
என்னதான் தலையில் பலவிதமான எண்ணெய்கள், முடி பராமரிப்பு பொருட்கள் தடவினாலும் உள்ளுக்குள் நாம் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவே முடி வளர்ச்சியை தீர்மானிக்கிறது. அடிக்கடி 4 பேரிச்சம் பழம், இரண்டு அத்திப்பழம், நிறைய பப்பாளி துண்டுகள், முருங்கைக் கீரை இவற்றை எல்லாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஒரு பெரிய நெல்லிக்காய் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அப்படியே குடிக்கலாம். தேவைப்பட்டால் கருப்பட்டியோ அல்லது நாட்டுச் சர்க்கரையோ சேர்த்து குடிக்கலாம். சப்போட்டா பழம் சாப்பிட்டால் முடி பளபளப்பாக மாறும். இவை உடலின் உள்ளேயிருந்து முடி வளர்ச்சியைத் தூண்டும் சில உணவு வழிமுறைகள்.
சரி, இப்போது வெளியில் முடியில் என்னென்ன தடவினால் முடி வளர்ச்சிக்கு உதவுமெனப் பார்க்கலாம்..
- கொய்யா இலையை நன்கு அரைத்து, அந்த விழுதை ஏற்கனவேவோ அல்லது முதல்நாளோ சுத்தமாக அலசிக் குளிப்பாட்டப்பட்ட தலையில் அப்ளை செய்து ஒரு பதினைந்து இருபது நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு ஷாம்பூ சிகைக்காய் எதுவும் போடாமல் வெறும் தண்ணீரில் அலச வேண்டும். ஒரு முடி கூட கொட்டாது. நிறைய காசு கொடுத்து இரசாயனம் கலந்த ஷாம்பூ, கண்டிஷனர்களை வாங்கி பயன்படுத்துவதைவிட கொய்யா இலையைப் பயன்படுத்திப் பாருங்கள். வியந்து போவீர்கள்!

- இன்னொன்று, பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த விழுதை தண்ணிக்குள் வைத்து லேசாக சூடு செய்து, தலை முடி முழுக்க தடவி பதினைந்து, இருபது நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு ஷாம்பூ எதுவும் போடாமல் அப்படியே வெறும் தண்ணீரில் அலச வேண்டும். இதுவும் தலைக்கு குளித்த தலையில்தான் தடவ வேண்டும். தலைமுடி பளபளப்பாக மாறுவதைக் காண்பீர்கள். தலையில் பீட்ரூட் விழுது தடவுவதால் முடி கலராக மாறி விடும் என பயப்பட வேண்டாம். தண்ணீரில் அலசினால் உடனே பீட்ரூட் நிறம் போய் விடும்.

- பச்சைப் பயிறை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து அந்த விழுதை தண்ணிக்குள் வைத்து லேசாகச் சூடு செய்து தலையில் அப்ளை செய்து பதினைந்து இருபது நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். இதனால் சளி, சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிறகு ஷாம்பு எதுவும் போடாமல் வெறும் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். பச்சைப்பயிறு தலைமுடியில் பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி கூடும், முடி கொட்டாது.

- சப்போட்டா விதைகளை சேகரித்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சப்போட்டா விதைப் பொடியை விளக்கெண்ணெயில் சேர்த்து லேசாக சூடு செய்து இரவில் தலையில் அப்ளை செய்து, மசாஜ் செய்துவிட்டு காலையில் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்து வர முடி பளப்பளப்பாக மாறும்.

மேற்சொன்ன எல்லாவற்றிலும் முதல் மார்க் வாங்குவது கொய்யா இலை! முயற்சி செய்து பாருங்கள்.. அதிசயித்துப் போவீர்கள்!
























