இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்ற நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிடித்திருந்தன. கொரோனா தளர்வுகள் ஓய்ந்த நிலையில் நேற்று மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கின.
இரண்டாம் கட்ட போட்டிகளின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே துபாயில் நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை அணி ரசிகர்களுக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் மற்ற போட்டிகளை விட இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு கூடியிருந்தது.
டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. பேட்டிங்கில் இறங்கிய சென்னை அணியில் ரித்துராஜ் கெய்க்வாட் மற்றும் டூ ப்ளசி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்க டூ ப்ளசி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார், அதற்கு அடுத்த இறங்கிய மொயின் அலியும் டக் அவுட் ஆக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததுமே சென்னை ரசிகர்கள் சற்றே கலங்கிப்போயினர்.
அதற்கடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன் கூட அடிக்காத நிலையில் பந்து பட்டு காயமானதால் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், தோனி 3 ரன்களில் அவுட் ஆக நூறு ரன்னைத் தொடுவதே பெரிய காரியமாகத் தோன்றியது. இந்நிலையில் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா பாட்னர்ஷிப் போட்டு வெளுக்கத்தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. நல்ல ஃபார்மில் இருந்த கெய்க்வாடுக்கு ஸ்ட்ரைக் ரொடேட் செய்தபடி ஜடேஜா விளையாடினார். 26 ரன்களில் ஜடேஜா அவுட் ஆக அடுத்து வந்த ப்ராவோ 8 பந்துகளில் 23 ரன்களை எடுத்து அவுட் ஆனார். தொடக்கத்தில் இருந்து கடைசி வரை நின்று விளையாடிய கெய்க்வாட் 88 ரன்கள் அடித்து அணியைத் தூக்கி நிறுத்தினார். சென்னை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது.
157 என்கிற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் குவண்டின் டி காக் 17 ரன்களும், ப்ரீத் சிங் 16 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 3 ரன்களும் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். கிட்டத்தட்ட இது வாழ்வா சாவா போட்டி போல் யார் வெல்லவிருக்கிறார்கள் என்கிற பதற்றம் இரு அணியினரையுமே தொற்றிக்கொண்டது. அதற்கடுத்து களமிறங்கியவர்களில் திவாரி மட்டுமே 50 ரன்கள் அடித்த நிலையில் மற்ற யாருமே 15 ரன்களைத் தாண்டாத நிலையில் 136 ரன்களில் ஆட்டமிழந்தது.

20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில் சிறந்த ஆட்டகாரராக 88 ரன்கள் அடித்து விளாசிய ரித்துராஜ் கெய்க்வாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
























