மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) இந்தியா முழுவதும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
























