சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்பதோடு நட்சத்திர ஆட்டக்காரரான் ஃபேப் டூ ப்ளசி காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில் அவர் விளையாடுவாரா என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது எனக் கூறியிருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அதன் தொடர்ச்சி ஆட்டங்கள் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. நாளை தொடங்கவிருக்கும் இரண்டாவது பாதி ஆட்டங்களில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது.
கிரிகெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அப்போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் டூ ப்ளசி விளையாடுவாரா? என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட காயமே இதற்குக் காரணம். சில நாட்களுக்கு முன்பு துபாய் வந்த அவர், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் விளையாடுவாரா என்பது குறித்த விளக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
“டூ ப்ளசி தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். பிறகு, அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு தான் அவர் விளையாடுவாரா என்பது குறித்துக் கூற முடியும்.” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
























