”தம்பி தங்கைகளே உங்கள் அண்ணனாகக் கேட்டுக்கொள்கிறேன்… உங்கள் உயிரை விட தேர்வு பெரியதல்ல… எந்த சூழலிலும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள்” என்று நடிகர் சூர்யா வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள் நடைபெற்ற நிலையில், நடிகரும், அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்கிற பாரதியின் வரிகளோடு பேசத்தொடங்கும் சூர்யா “ மாணவர்கள் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு கடந்த மாதம் இருந்த வேதனை, கவலை இந்த மாதம் இருக்கிறதா? யோசித்து பாருங்கள். நிச்சயம் குறைந்திருக்கும். அல்லது தீர்ந்திருக்கும். தேர்வு உங்கள் உயிரை விட பெரியது இல்லை. உங்கள் மனம் சோர்வுற்றிருந்தால் உங்களுக்கு பிடித்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனதுவிட்டு பேசிவிடுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக்கூடியதுதான்.
எந்த ஒரு சூழலிலும் தற்கொலை முடிவை எடுத்து உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்காதீர்கள். தற்கொலை என்பது உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வுகளில் மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்திருக்கிறேன். மிகக்குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டும் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும். ஆகவே எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
























