இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தாத்தாவின் திருவுருவப் படத்திற்கு முன்னால், சீமான் அவர்கள், நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தினார்.
அதில் தமிழர் நல பேரியக்கத்தலைவர் இயக்குனர் களஞ்சியம், மருது மக்கள் இயக்கத்தலைவர் முத்துப்பாண்டி மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், புது கவர்னர் நியமனம் பற்றிய கேள்விக்கு,
‘மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அது பாஜக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருப்பவர்களைதான் ஆளுநராக போடுவார்கள். தற்போதும் தமிழக்தின் புதிய ஆளுநர் அப்படித்தான் வந்துள்ளார். மக்களை சந்தித்து, மக்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை ஆளுநர்களாக போட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியோரை ஆளுநர்களாக போடுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட இதனை எதிர்த்துள்ளார். மக்கள் கடைசியாக நம்பி இருப்பது நீதிமன்றத்தைதான். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எதையோ எதிர்பார்த்து பொறுப்பில் அமர்ந்தால் நீதி எப்படி இருக்கும். எனவே மக்களை சந்திப்பவர்களை ஆளுநர்களாக போட வேண்டும். இந்த நியமனங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்றார்.
நீட் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம் என்ற உதயநிதியின் வேண்டுகோளுக்கு பதில் அளிக்கையில், ‘தம்பி உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம் என்கிறார்கள். மாணவி அனிதா இறந்தபோது இப்போது இருக்கும் முதல்வர் அதனை அரசியலாக்கவில்லையா? அப்படியானால் எது அரசியல்? எங்கள் பிள்ளைகளின் உயிரை விட உயர்ந்த அரசியல் ஒன்று உள்ளதா? நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றுகிறார்கள். இதனை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. மாநில அரசின் சட்டத்தை மதிக்காத ஒன்றிய அரசின் சட்டத்தை ஏன் மதிக்க வேண்டும்? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க தமிழக அரசுக்கு துணிவு இருக்கிறதா?’ என்றார்.
உள்ளாட்சி பதவிகளை தேர்தலில் ஏலம் விடுவது பற்றிய கேள்விக்கு, அப்படித்தான் நடக்கிறது, தடுக்க இங்கே யாருமில்லை. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடப்பது ஏன்? தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்ட பிறகு ஒரே கட்டமாக நடத்த முடியாதா? வாக்கிற்கு பணம் கொடுப்பதிலிருந்து தான் எல்லாம் தொடங்குகிறது. அதை செய்வது அதிமுகவும், திமுகவும் தான். தி.மு.க தங்களை நேர்மையாளர்கள் என காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக தான். தமிழகத்தில் எந்த தீய திட்டத்திற்கும் வேர் தேடி போனால் தி.மு.க தான் இருக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.





























