டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியும், பாராட்டுகளையும் பெற்ற திரைப்படமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
டாம் ஹேங்ஸ் நடிப்பில் 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. எந்த சூழலிலும் மற்றவருக்கு தீங்கிழைக்காத ஓர் தூய ஆத்மாவான ஃபாரஸ்ட் கம்ப் எனும் கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படம்தான் ஃபாரஸ்ட் கம்ப். ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த இத்திரைப்படம் உலக அளவில் திரை ரசிகர்களால் இன்றளவிலும் கொண்டாடப்படக்கூடிய திரைப்படமாக அது இருக்கிறது.

27 ஆண்டுகள் கழித்து அத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இந்தித் திரையுலகில் கலையம்சம் கூடிய திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அமீர்கான் நடிப்பில் இத்திரைப்படம் ‘லால் சிங் சட்டா’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து அமீர்கான் இப்படத்தைத் தயாரிக்கிறார். அத்வைத் சந்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அமீர்கானின் நண்பனாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதனை கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தை அப்படத்தில் நடித்துள்ள அதுல் குல்கர்னி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
























