ஐந்து வயது சிறுவனை அக்கா முறையாகும் உறவுக்காரப் பெண்ணே தாக்கி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்தவர் சூசை மேரி. இவரது கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் சூசை மேரி வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இதனால் தன் இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாமல் போனது. இதற்காக தமது இரண்டு குழந்தைகளையும் பெருங்களத்தூரில் உள்ள அக்கா மகளான மேரியிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது 5 வயதான ஆபேல் மயங்கி விழுந்து விட்டதாக மேரி தகவல் அளித்துள்ளார். அதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனைப் பரிசோதித்த போது அவனது உடலில் தீக்காயம், நகக்கீறல் மற்றும் உள்காயங்கள் இருந்ததையடுத்து இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடற்கூராய்வுக்கு உட்படுத்தினர்.
தலையில் ரத்தம் உறைந்ததன் காரணமாகவே சிறுவன் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்தது. இதனால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், சிறுவனை கவனித்துக் கொண்ட அக்கா உறவு முறையான 20 வயதான மேரியிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் ”சிறுவன் சேட்டை செய்ததன் காரணமாக தான் அவனைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் மேரியைக் கைது செய்தனர்.
























