தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறையின் 2021- 2022ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு இதற்கு முன் 30 சதவீதமாக இருந்தது.
இதற்குப் பெண்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கின்றது. ஆனால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்த அறிவிப்பிற்குப் பல இடங்களில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்திருக்கின்றன. 30 சதவிகித இட ஒதுக்கீடோடு, பொதுப் பிரிவான 70 சதவீதத்திலும் பெண்களால் போட்டிப்போட முடியும் என்பதால் ஏற்கனவே, அரசுப் பணிகளில் சுமார் 60% பணியிடங்களைப் பெண்களே பெறுகிறார்கள் எனவும், அதனை 40 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதால் அது 70 சதவிகிதத்திற்கும் மேல் என உயரலாம் எனவும் ஆண்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

1989-ல் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வேண்டும் என 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்த பெண்களின் நிலையையும், சுதந்திரத்தையும் ஒப்பிடும்போது, இப்போது அவர்களின் சமூக நிலை மேம்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மேலும் 10 % இடஒதுக்கீடை உயர்த்துவது, அரசியல் ஆதாயத்திற்கானது எனும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் நிர்வாகம் சார்ந்த வேலைகளில் பெண்கள் குறைந்த அளவில் உள்ளனர். நிர்வாகப் பணிகளில் பெண்கள் கிட்டத்தட்ட 50% பேர் கடைநிலை ஊழியர்களாக உள்ளனர். நிர்வாகப் பணிகளில் உயர் பதவிகளில் 20% பெண்கள் மட்டுமே உள்ளதாகத் தகவல். செவிலியர், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களில் 90- 95% பெண்கள் உள்ளதாகவும் அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களில் 60-70% பெண்கள் இருப்பதாகவும் தகவல் உள்ளது. மருத்துவம், மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களில் 50% மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்கள். சட்டத்துறையில் 12% குறைவாகவே பெண்களின் எண்ணிக்கை உள்ளதாகத் தகவல் உள்ளது. பொதுப்பணித்துறை, கட்டுமானம் போன்ற களப்பணிகள் சார்ந்த துறைகளில் பெரும்பாலும் ஆண்களே பணியமர்த்தப்படுகின்றனர். இதில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.
இன்று எந்த அரசு துறையிலும் 50-50 ஆண், பெண் என்ற சமத்துவத்தை அடையவில்லை. சமூக,பொருளாதார, அரசியலில் பெண்களின் பங்கு குறைவாகத்தான் இருக்கிறது. அரசு கொண்டு வந்த 40சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் முன்னேற்றத்துக்கான அடித்தளம். மீதமுள்ள 60 சதவீதத்தில் போட்டியிட்டு யார் வேண்டுமானாலும் மேலே வரமுடியும். பெண்கள் 50 சதவீத இடங்களில் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு இட ஒதுக்கீடு தேவையற்றது என முடிவுக்கு வரலாம். அது வரை இந்த இட ஒதுக்கீடு தேவையானது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
























