திராவிட இயக்கங்களுக்கான முன்னோடி, சமூக நீதி மற்றும் சுய மரியாதைக்கான போராளி தந்தைப் பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியின் 143வது பிறந்த நாள் இன்று. இந்தியாவில் சாதியின் பெயரால் நடக்கும் ஒடுக்குமுறை, வகுப்புவாதத்தை களைய முற்பட்ட போராளிகளில் பெரியார் முக்கியமானவர். சாதி மட்டுமின்றி மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகிற மூட நம்பிக்கைகள் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடியவர்.
ஈரோட்டில் வெங்கடசாமி நாயக்கருக்கும் சின்னத்தாய் அம்மையாருக்கும் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார் ராமசாமி. ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர் தனது 19-வது வயதில், நாகம்மையை திருமணம் செய்து கொண்டார்.
தன் சிறுவயது முதலே கடவுள் மறுப்பாளராகவும், சாதிய ஏற்றதாழ்வுகளுக்கு எதிரானவராகவும் வளர்ந்தார். ஈரோட்டில் செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த அவரது சிந்தனை ஒடுக்கப்படுகிற மக்களின் மீது நிலை கொண்டிருந்தது. சாதிய ஏற்ற தாழ்வுகளைக் களைய வேண்டும். இங்கே அனைவரும் சமம் என்கிற கருத்தை உறுதியாக ஏற்று அவர் தொடங்கிய சீர்த்திருத்தப் பயணம் அவரது கடைசி மூச்சு வரை தொடர்ந்தது. வயோதிகத்தில் நடக்கக்கூட முடியாத சூழலில் சிறுநீர் பையுடன் மேடைகளில் தோன்றி பகுத்தறிவை மக்களிடம் விதைத்தார்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் பெரியாருக்கு இருந்ததே இல்லை. அவர் சமூக சீர்திருத்தம் மட்டுமே தனது பணி என்பதில் உறுதியோடு இருந்தார். 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பெரியார் மூடநம்பிக்கைகள், வர்ணாசிரம தத்துவம், சாதிய ரீதியான கொடுமைகள், குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, உடன் கட்டை ஏறுதல் என சமூகத்தில் நாள்பட்ட வியாதியாக உறைந்திருந்த அநீதிகளுக்கு எதிராக போராடினார். 1938 ம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பெரியார் பின்னர், 1944-ஆம் ஆண்டில் அதற்கு திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார்.
பெரியாரின் சீடரான அண்ணாதுரை தேர்தல் அரசியலில் களம் இறங்கும் பொருட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அக்கட்சிக்கும் பெரியார்தான் தலைவர் என்று கூறி அண்ணா பொதுச்செயலாளராகவே தன்னை அறிவித்துக் கொண்டார். அப்படியான உதயமான திமுக பெரியாரின் வழியில் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், தமிழ் மொழியில் அர்ச்சனை, இடஒதுக்கீடு போன்றவை குறித்து நீண்ட காலம் பேசியவர் பெரியார்.
இந்தியாவின் அரசியலமைப்பின் சில பகுதிகள் சாதியை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி அதை எரித்து போராடினார் பெரியார். சுதந்திரத்துக்கு பிந்தைய இந்திய வரலாற்றில் நடைபெற்ற முதல் அரசியலமைப்பு எரிப்பு போராட்டம் அதுவே. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் இன்று ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்திருப்பதற்கு விதை போட்டவர் பெரியார்தான்.
தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருந்தவர் பெரியார். கள்ளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் தன் சொந்த நிலத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தது போன்று இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்றிருந்த சமூக சூழலில் பெண்ணுக்கு சம உரிமை, சொத்துரிமை வேண்டும் என்று பேசியவர் பெரியார். பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவள், ஆணைச்சார்ந்து வாழும் உயிரி அல்ல என்பதை அனைத்து மேடைகளிலும் முழங்கியவர் பெரியார். பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிப் பேசியவர். இன்றைக்கு பெண்ணியம் பேசுகிற அனைவருக்கும் முன்னோடியாக பெரியாரே இருக்கிறார்.
பெரியாரின் செயல்பாடுகளைப் பற்றி முழுமையாக எழுதினால் பக்கங்கள் போதாது. அரசியல் அதிகாரத்தில் இல்லா விட்டாலும் பல அரசியல் சீர்திருத்தங்களுக்குக் காரணமானவராய் இருந்துள்ளார். இத்தகைய போராளி 1974-ஆம் ஆண்டு டிசம்பர் 24 தேதி தனது 94 வது வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பங்களிப்பின் பலனை இன்றைக்கும் நாம் அனுபவித்து வருகிறோம். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியை சமூகநீதி நாள் என அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நாளில் பெரியாரின் கொள்கைகளான பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, சம உரிமை போன்றவற்றை உறுதியேற்போம்.
























