முப்பது வயதைக் கடந்து விட்டாலே, சர்க்கரை நோய் நமக்கு வந்து விடக் கூடாது என்ற அச்சம் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உண்ட உணவு அதன் சத்துப் பொருட்களைச் செரித்து, உடம்பின் அன்றாட வளர்சிதை மாற்றத்திற்கு உரிய பங்காற்றி, ஆற்றலாக அவை வெளிப்படுத்தப்படாத நிலையில்தான் சர்க்கரை, கொழுப்பு, உள்ளிட்டக் குறைபாடுகளை இயல்பாக நாம் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறோம். எதற்கும் நேரமில்லாமல் எல்லாமே துரிதகதியாகிவிட்ட நம் வாழ்க்கையில் உணவு முறைகளிலும் நாம் விரும்பியோ விரும்பாமலோ பல மாற்றங்கள் புகுத்தப்பட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட எதிர் விளைவுகள்தான் இக்காலத்தில் சிறுவர்கள் கூட சர்க்கரைப் பிரச்சினைக்கு ஆளாகி வருவது. நம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளை கட்டுக்குள் வைக்க அன்றாடம் நாம் பயன்படுத்திய அந்தக்கால உணவுப் பொருள் ஒன்றிலேயே மருத்துவம் இருக்கிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம்தான் அந்த மகத்துவமும் மருத்துவமும் மிக்க உணவுப் பொருள். இதை ஏன் அந்தக்கால உணவுப் பொருள் என இங்குக் குறிப்பிடுகிறோம் என உங்களுக்குக் கேள்வி எழலாம். நம் அவசரகதி வாழ்க்கையில் உணவு சமைக்கும்போது வேலையை எளிதாகவும் சீக்கிரமாகவும் முடிக்கப் பெரிய வெங்காயத்தின் பயன்பாட்டுக்கு நாம் நகர்ந்துப் பலகாலம் ஆகிவிட்டதால்தான் அப்படிக் குறிப்பிட வேண்டியதானது.
சின்ன வெங்காயம் நம் இரத்தத்தில் கொழுப்பின் அளவையும், சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கும் ஒரு அருமருந்தாகும். அதைத்தான் நாம் உணவு சமைக்கப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. அப்படிப் பயன்படுத்துவது ஆரோக்யம்தான் என்றாலும் அவ்வளவு பொறுமை நம்மில் யாருக்கும் இப்போது இருப்பதில்லை. எனவே எளிதான ஒரு வழி இருக்கிறது. அதாவது, நமது ஒவ்வொரு வேளை உணவின்போதும் நான்கைந்து சின்ன வெங்காயங்களை உறித்து, நறுக்கி வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவும், கொழுப்பின் அளவும் இயல்பாகக் குறைந்து வரும். சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையிலோ, மாத்திரை எடுத்துக் கொண்டோ இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளை [அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப] முழுவதுமாகக் கைவிட இந்தச் சின்ன வெங்காயம் எனும் எளிதான உணவுப் பண்டம் மருந்தாக உதவுகிறது. உணவுக்குப் பின் சர்க்கரையின் அளவு 200-லிருந்து 300-க்குள் இருப்பவர்களுக்கு சின்ன வெங்காயம் ஒரு வரப் பிரசாதம்.

சின்ன வெங்காயம், இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும். இதனால் மிகை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இயல்பாக இரத்த அழுத்தம் குறையும். அது மட்டுமின்றி, சின்ன வெங்காயம் இரத்த நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும் தன்மையையும் தன் இயல்பில் கொண்டிருப்பதால் நாளங்களில் இரத்த ஓட்டம் சீராகி, இதயம் அதன் மென்மை மாறாமல் வலிமையோடும் ஆரோக்கியத்தோடும் தன் ஆயுளை நீட்டித்துக்கொள்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற பெருஞ்சிக்கல்கள் இயல்பாகவே நம்மை விட்டு நீங்குகின்றன. சின்ன வெங்காயத்தில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் நீக்கும் தன்மையுள்ளது.

’நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற சித்தர்களின் வாக்குப்படி, நம் முன்னோர்கள் பழைய சோறுடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்துச் சாப்பிட்டுச் சர்க்கரை, இரத்த அழுத்தம், போன்ற குறைபாடுகள் எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள். சின்ன வெங்காயத்தில் உள்ள ‘சல்ஃபர்’ இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகையையும் போக்கும். காச நோயைக் குணப்படுத்தும். சின்ன வெங்காயத்தில் அதிகளவு Anti oxidants இருப்பதால் புற்றுநோய் வராமலும் தடுக்கும். அது மட்டுமின்றி சின்ன வெங்காயச் சாறு எடுத்து தலைமுடிப் பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். ’பொடுகு வராமல் தடுக்க வெங்காயச் சாறு கலந்தது’ என இன்றைய முன்னணி ஷாம்பூ நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். மொத்தத்தில் சின்ன வெங்காயம் மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்லலாம்! இதனால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டேதான் போகுமே தவிர உணவுப் பொருளானச் சின்ன வெங்காயத்தால் நமக்குப் பாதிப்புகள் எதுவுமே இல்லை.
தினமும் ஒவ்வொரு வேளை உணவின் போதும், நான்கைந்து சின்ன வெங்காயங்களைத் தோலுரித்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் பச்சையாக உணவோடு சேர்த்து உண்ணலாம். இன்றைய துரிதகதி வாழ்க்கையில், நச்சு மிகுந்தச் சுற்றுச் சூழலில், 30 வயதிற்கு மேல் உள்ள அனைவருமே சின்ன வெங்காயத்தை இப்படிச் சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, உள்ளிட்டப் பல குறைபாடுகள் வராமல் தவிர்க்கலாம். வெங்காயம்தான் சாப்பிடுகிறோமே என நின்றுவிடாமல், நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சிறிய உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்வதும் நம் உடல் மன நலனுக்கு அத்தியாவசியம். உடற்பயிற்சிகளுடன் கூடிய மேற்சொன்ன விதத்திலானச் சின்ன வெங்காயப் பயன்பாடு உறுதியாக உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு நல்விளைவை ஏற்படுத்தும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் சர்க்கரை அளவைப் பரிசோதித்து விட்டு, அதிலிருந்து, ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 3 வேளையும் சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு விட்டு, சர்க்கரை அளவை மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். நீங்களே வியந்து போவீர்கள்!
























