சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற திமுக அரசு முனைந்தால் அதிமுக அதனைக் கண்டித்துப் போராடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது. அதன்பின் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஏற்கனவே செயல்பட்டு வந்த செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகத்தை மாற்றினார் ஜெயலலிதா. பின்னர் புதிய தலைமைச் செயலகத்தை அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டார்.
பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் இச்சூழலில் அகற்றப்பட்ட ‘புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலக வளாகம்’ என்ற கல்வெட்டு அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்தக் கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது.
அந்தக் கல்வெட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி அன்று கருணநிதி தலைமையில் சோனியா காந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டசபை அரங்கம், தலைமைச் செயலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்த விவரம் இடம் பெற்றுள்ளது. இதனால் அம்மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றும் திட்டத்தில் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொலைநோக்குப் பார்வையுடன் அக்கட்டடத்தை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். அதன் மூலம் கொரோனா காலத்தில் எவ்வளவோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
உயிர்களைக் காப்பாற்றும் அந்த மருத்துவமனையை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் முதல்வருடைய தந்தையின் புகழ்பாடுவதற்காக மாற்றுகின்றனர். பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால் அதை எதிர்த்து பொதுமக்களைத் திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும். அந்நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்” என்று ஜெயக்க்குமார் கூறினார்.
























