நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி கனிமொழி குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் தோல்வி பயம் காரணமாக நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாணவி கனிமொழி மரணத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்ததோடு தற்கொலை முடிவுக்கு மாணவர்கள் சென்று விடக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அரியலூர் அருகே சாத்தம்பாடியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கனிமொழியின் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்.
























