அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. பதவியில் இருந்தகாலத்தில் வருமானத்துக்கும் அதிகமாக 28.78 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, வேலூர், திருவண்ணாமலை, ஏலகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக 654 சதவிகித அளவுக்கு சொத்துக்களை வாங்கியுள்ளது தெரிய வந்திருப்பதால் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த சோதனை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அதிமுக முன்னாள் ஜெயக்குமார்.
”உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரைப் பணி செய்ய விடாமல் தடுக்கவே ரெய்டு நடத்தப்படுகிறது. இது ஒரு வகையான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று அவர் கூறியுள்ளார்.
























