ஆண்டுதோறும் டைம் இதழ் வெளியிடும் உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு தரவுகளை அடிப்படையாக வைத்து ஆண்டுதோறும் டைம் இதழ் உலகில் செல்வாக்கு மிகுந்தவர்கள் என்கிற பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலுக்கு உலகெங்கிலும் ஏகோபித்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிகுந்தோர் 100 பேர் அடங்கிய பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பிறகு உருவான மிகப்பெரிய அரசியல் சக்தியாக மோடி இருப்பதாக டைம் இதழ் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், மோடி குறித்தான விமர்சனங்களையும் அக்கட்டுரையில் முன் வைத்திருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் “ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சல் மிக்க பெண்ணாக சாதித்தவர் என்று அவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜிங் பிங், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், தலிபான் தலைவர் மவுல்வி அப்துல் கனி பராதரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























