9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் “அதிமுகவுடன் எந்த முரண்பாடும் இல்லை எனவும், தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாமக நீடிக்கும்” எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்…
“9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நேற்று நடைபெற்ற பாமக இணையவழி கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் , கட்சியினர் அனைவரும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். எனவே அதிகமானோருக்கு வாய்ப்பு தருவதற்காக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.
இந்த முடிவின் மூலம் அதிமுகவுடன் பாமகவிற்கு முரண்பாடு ஏற்பட்டதை போன்ற தோற்றம் உருவானதில் உண்மையில்லை. அதிமுகவுடன் நட்போடுதான் இருக்கிறோம். அதிமுக மீது நேற்று எந்த விமர்சன கருத்தையும் கட்சியினர் கூறவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு போதிய கால அவகாசம் இல்லாததாலும், பெரும்பான்மையான கட்சியினர் போட்டியிட வாய்ப்பளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்.
அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயகுமார் ஊடக செய்தியை அடிப்படையாக வைத்து அதிமுக மீது பாமக விமர்சனம் செய்துள்ளதாக கூறியுள்ளார். எதிர்காலத்தில் உண்மையை உணர்ந்து கொள்வார். இதுவரை எந்த கூட்டணியில் இருந்தோமோ அதே கூட்டணியில் தொடர்கிறோம்.
30 மணி நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய குறுகிய காலமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக மேற்கொண்ட முடிவை அரசியல் ரீதியாக பெரிய முடிவாக இதை பார்க்க முடியாது , சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மட்டுமே பாமக – அதிமுக இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர மற்ற 7 மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளது. எனவே கட்சியினர் பலருக்கு வாய்ப்பு வழங்கவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாமக பலமான பகுதியில் தேர்தல் நடைபெறுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் , அதிமுகவுடன் எந்த குளறுபடியும் இல்லை.” என்று கூறினார்.
























