ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த மே மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்றன. 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக நடக்கவிருந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், இத்தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை துபாயில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையதளங்களில் பெறலாம் என்று தெரிவித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போதுதான் உலகே மீண்டு வரும் நிலையில் இப்போட்டிகளை விளையாட்டரங்கில் சென்று காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர்.
























