அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணியை நம்பி அதிமுக இருந்ததில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தேமுதிக, பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது பற்றிக் கேட்ட போது…
“கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, தேவையென்றால் போட்டுக்கொள்வோம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்வோம். அதிமுகவைப் பொறுத்த வரை நாங்கள் எப்போதும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. ஆட்சியின்போது செயல்படுத்திய திட்டங்கள், தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்குத்தான் சரிவரும்” என்று கூறினார்.
மேலும் நீட் குறித்து கேட்டபோது…
“நீட் தேர்வு ரத்து செய்யப்படாததற்கு திமுக தலைமையிலான தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஆட்சியிலும் சட்ட மசோதா கொண்டு வந்திருந்தோம். திமுக கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
























