நீட் தேர்வு பயம் காரணமாக சமீப காலத்தில் தொடர்ச்சியாக மூன்று உயிர்கள் பறிபோயிருக்கும் சூழலில் மாணவர்கள் யாரும் மனம் தளராதீர்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் வலுவான போராட்டம் தமிழகத்தில் எழுந்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. இதனையடுத்து பாஜக தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சேலம் மாணவர் தனுஷ், அரியலூர் மாணவி கனிமொழி மற்றும் வேலூர் மாணவி சவுந்தர்யா ஆகியோர் அடுத்தடுத்து நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்
“மாணவச் செல்வங்களே மனம்தளராதீர்கள்… கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம் நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், இது பற்றிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கும் ஸ்டாலின், பெற்றோர் தேர்வு குறித்து குழந்தைகளுக்கு நெருக்கடிகளைத் தராதீர்கள் என்றும், பல தடைகளைத் தாண்டி படிக்க வரும்போது இது போன்ற நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
























