தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளன.
தேர்தல் நடத்தப்படாத பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் செப்டம்ப 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக அலுவலகத்தில் அளிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே போல் பாமகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்விரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவை. இவை இரண்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்கிற கருத்து நிலவுகிறது.
























