நீட் தேர்வு பயத்தின் காரணமாக கனிமொழியைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்கிற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வு பயம் காரணமாக சேலம் மாணவன் தனுஷ் மற்றும் அரியலூர் மாணவி கனிமொழி ஆகியோர் சமீபத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சவுந்தர்யா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதியுள்ள இவர் தேர்ச்சி பெறுவோமா என்கிற பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழலில், தொடர்ச்சியான தற்கொலைகள் நீட் தேர்வுக்கு எதிரான அலையை உருவாக்கி வருகிறது. நீட் தேர்வை தடை செய்வதற்கான சட்ட ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் யாரும் எந்த சூழலிலும் தற்கொலை முடிவுக்குச் செல்லக்கூடாது என்பது அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.
























