நீட் எனும் உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனை தருவதாகவும் சட்டப்போராட்டத்தின் வழியாக நீட் தேர்வை விரட்டுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி. 12ம் வகுப்பில் 93 விழுக்காடு மதிப்பெண் பெற்ற இவர் டாக்டர் ஆகும் கனவோடு நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோற்று விடுவோமோ என்கிற பயத்தில் துவாரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்தில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட தனுஷ் என்கிற மாணவனை அடுத்து கனிமொழியின் தற்கொலை நீட் தேர்வுக்கு எதிராக பெரும் எதிர்ப்பலையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது பற்றிய அறிக்கை ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ‘பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்தே அதனை எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வு அல்ல என்பதை வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்ட மோசடி, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் வழியாக உணர முடிகிறது. சட்டப்போராட்டத்தின் வாயிலாக நீட்டை விரட்டுவோம். கனிமொழி போன்று இன்னொரு மரணத்துக்கு இடம் கொடுக்காத வகையில் செய்லாற்றுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
























