திமுக அரசு பாஜக-வைத் தவிர்த்து அனைத்து கட்சியினர் ஆதரவோடு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில், தலைகீழாக நின்று மசோதா கொண்டு வந்தாலும் நீட் தேர்வு நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ”பாஜகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கோ, சமூக நீதிக்கோ எதிரானது கிடையாது. நீங்கள் தலைகீழாக நின்று மசோதாவைக் கொண்டுவந்தாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதே போன்று மூன்று வேளாண் சட்டங்களும் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும். அதனையும் மாற்ற முடியாது”என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் காரணமாக சமீபத்தில் தொடர்ந்து 2 மாணவர் தற்கொலைகள் நடந்துள்ள சூழலில் அண்ணாமலையின் இக்கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
























