நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி கனிமொழி உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி. 12ம் வகுப்பில் 93 விழுக்காடு மதிப்பெண் பெற்ற இவர் டாக்டர் ஆகும் கனவோடு நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோற்று விடுவோமோ என்கிற பயத்தில் துவாரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு பயம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற மாணவன் சமீபத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் அடுத்ததாக கனிமொழியின் மரணம் நீட் எதிரான அலையை மேலும் வலுவாக்கியிருக்கிறது. இந்நிலையில், கனிமொழி தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாணவி கனிமொழியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது தந்தை கருணாநிதிக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் ”ஒன்றிய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டது. எனவே நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு பெறும் வரையிலும் மாணவர்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு போராட வேண்டும். யாரும் தற்கொலை முடிவுக்குச் செல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.
























